ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருந்த லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்திருந்தார்.
ஹரிஷ் கல்யாண் விஜயின் ரசிகராக நடித்திருந்தார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவருக்கும் இடையிலான ஈகோ கிளாஸ் காட்டப்பட்டது. பார்க்கிங் திரைப்படத்தை போல் இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பால சரவணனை, நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார். அதாவது பாராட்டியது மட்டுமல்லாமல் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டுள்ளார்.
இது தொடர்பாக பால சரவணன் தனது சமூக வலைதள பக்கத்தில், ” லப்பர் பந்து படம் பார்த்துவிட்டு நேரில் அழைத்து, ‘பாலா உன்னை படத்துல அவ்ளோ ரசித்தேன் டா. உனக்காக மக்கள் தியேட்டரில் கைதட்டும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்துச்சுடா தம்பி’ என்று கட்டி அணைத்து முத்தமிட்டு அன்பாக பாராட்டிய அன்பு அண்ணன் விஜய் சேதுபதிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் முத்தங்களும்” என்று பதிவிட்டு விஜய் சேதுபதியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.