தயிரில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி12, புரதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
அது மட்டும் இல்லாமல் நாம் ஏதேனும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தி இருந்தால் அதன் மூலம் அழிந்த நல்ல பாக்டீரியாக்களை திரும்பக் கொண்டு வர தயிர் உறுதுணையாக இருக்கும். அதன்படி வெயில் காலத்தில் தயிர் சாப்பிடுவது நம் உடல் சூட்டை தணித்து நம்முடைய ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். அதேபோல் குளிர்காலங்களிலும் தயிர் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது.
குளிர்காலத்தில் பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானமடைய தாமதம் ஏற்படும். அதாவது குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லது தான் என்றாலும் தயிரானது நபருக்கு நபர் எதிர்மறையான அல்லது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
குளிர் காலத்தில் செரிமான கோளாறு ஏற்படும் வாய்ப்பு இருப்பதனால் வயிறு உப்புசம், வீக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகக்கூடும். எனவே தயிரை தினமும் எடுத்துக் கொள்ளாமல் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக்கொள்வது நல்லது. இருப்பினும் குழந்தைகள், வயதானவர்கள் இரவு நேரங்களில் தயிர் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது சளி, அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். எனவே குளிர் காலங்களில் தயிரை அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். இருப்பினும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.