தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி பேட்டி அளித்துள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி திருமுல்லைவாயல் சுற்றுப்பகுதியில் வீதி வீதியாக திறந்தவெளி வாகனத்தில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திருமுல்லைவாயல் பகுதி சரஸ்வதி நகர், சோழம்பேடு, வைஷ்ணவி நகர், எஸ்.எஸ்.நகர், நாகம்மை நகர் போன்ற பகுதிகளில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பிரச்சார வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களில் வீதி வீதியாக முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வாக்கு சேகரித்தனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, ஆவடி தொகுதி மக்கள் என்ன வசதி கேட்டாலும் முழுமையாக செய்து தருவேன் என்றும் அரசு வழங்கும் நிதியில் என்ன பணி இருந்தாலும் செய்து கொடுப்பேன் என்றும் தன்னை செய்ய விடாத பட்சத்தில் மக்களோடு களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.
தமிழ் இளைஞர்கள் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் வேலை இல்லாமல் இருப்பதாகவும் வடமாநில தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் வேலை பார்ப்பதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து தொழில் நிறுவனத்திலும் கூட்டணி கட்சி அதிமுக நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று அந்த நிறுவனத்தின் (ஹெச்.ஆர்) மனித உரிமை அதிகாரி அவர்களை நேரடியாக சந்தித்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தி அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகவும் தெரிவித்தார்.
பட்டாபிராம் பகுதியில் கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ள டைட்டில் பார்க்கில் திருவள்ளூர் தொகுதி மக்களுக்கு பணி வழங்கவில்லை என்றால் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவேன் எனவும் தெரிவித்தார்.
ஆவடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நாடாளுமன்றத்தில் மக்களின் கோரிக்கையாக திருவள்ளூர் நாடாளுமன்ற கோரிக்கையாக வைத்து நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பேன் என்றும் அனைத்து ரயில்களையும் நின்று செல்ல வழிவகை செய்வேன் என்றும் தெரிவித்தார்.
https://www.mugavari.in/news/sports/mivscsk-today-ipl-match/1012
ஆவடி சுற்றுப்பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டா இல்லாமல் வசித்து வருவதாக கேள்விப்பட்டதாகவும் அதற்கு உடனடியாக அப்பகுதியை ஆய்வு செய்து பட்டா கொடுக்கும் நிலையில் இருந்தால் பட்டா வாங்கிக் கொடுப்பதாகவும் இல்லை என்றால் மாற்று வழி இட வசதி செய்து தருவேன் என்றும் தெரிவித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆங்காங்கே 1000 -க்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்தும் வேட்பாளரை மகிழ்ச்சியோடு வரவேற்று வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டனர்.